search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் பெயர்"

    தமிழுக்குரிய பெருமைகளை நிலைநாட்டிட குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்-சுபாஷினி ஆகியோரது திருமண விழா துறையூரில் உள்ள சிவாலயா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு முன்னிலை வகித்தார். விழாவிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தற்போது நடப்பது சீர் திருத்த திருமணம் மட்டுமல்ல, சுய மரியாதை திருமணம். தமிழ் திருமணம்.

    மணமகன் ஸ்டாலின் குமார் எனது பெயரை வைத்திருக்கிறார். அதை வைத்திருப்பது பெரிதல்ல. அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்பது தான் முக்கியம்.

    ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயர் இல்லை. காரணப் பெயர். இதை கருணாநிதி, தனது நெஞ்சுக்கு நீதியில் சொல்லி இருக்கிறார்.

    எனது குடும்பத்தில், மு.க.முத்து என்பது தாத்தா முத்துவேலர் பெயர். பட்டுக்கோட்டை அழகிரியை பார்த்து மு.க.அழகிரி பெயர். அதன்பின் செல்வி, தமிழரசு எல்லாம் தமிழ்ப் பெயர்கள்.

    எனக்கு வைக்கவிருந்த பெயர் ஐயாதுரை. ஐயா என்றால் பெரியார், துரை என்றால் அண்ணாதுரை. சென்னையில் நடந்த ரஷ்ய அதிபர் ஸ்டாலின் இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி பேசிக் கொண்டிருந்த போது, நான் பிறந்ததால் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்ட போவதாக மேடையிலேயே கருணாநிதி அறிவித்தார்.

    இந்த பெயரால் எனக்கு பல சிக்கல். சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் என்னையும், செல்வியையும் சேர்க்க முரசொலி மாறன் அழைத்து சென்றார்.

    ஸ்டாலின் என்ற பெயரை மாற்றினால் தான் பள்ளியில் சேர்ப்பேன் என்றனர். ‘பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேன், பேரை மாற்றமாட்டேன்’ என்று உறுதியாக கூறிவிட்டார் கருணாநிதி.

    அதனால் நான் மட்டுமல்ல. செல்வியும் அங்கு படிக்க முடியாமல் போனது. அங்கு படிக்காததும் ஒரு வகையில் நல்லதுதான். ஏனென்றால் ஜெயலலிதா அங்கு தான் படித்தார். தமிழுக்குரிய பெருமைகளை தொடர்ந்து நிலைநாட்டிட நம் குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயரைச் சூட்ட வேண்டும். அப்போது தான் நாம் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.

    தமிழகத்தில் நடப்பது அடிமை, ஊழல் ஆட்சி. பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.


    இன்று மாலை சந்திரபாபு நாயுடு என்னை சந்திக்க வருகிறார். நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி சந்திக்க வருகிறார்.

    பா.ஜ.க. ஆட்சியை அகற்ற தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றனர். இது நாம் கருணாநிதி லட்சிய பாதையில் உறுதியாக செல்வதை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, மதிவாணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  #DMK #MKStalin
    ×